விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க அறிவிப்பு
|விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
சென்னை,
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க.வும் அறிவித்துள்ளது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள அ.தி.மு.க அறிவித்த நிலையில், தற்போது தேமுதிகவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்றைய ஆட்சியாளர்களின் கரங்களில் தேர்தல் என்கிற ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக்குறியாகிறது. இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் விரயம் செய்ய விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதி காலியானது.
இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக களம் இறங்கியுள்ளது. பாமக வேட்பாளராக சி. அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக தற்போது, அதிமுகவை பின்பற்றி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.