ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை - இயக்குநர் நெல்சன்
|ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன், இது போன்றவர்கள் மட்டுமல்லாது அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளுக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. கொலை சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன். இவர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில், மொட்டை கிருஷ்ணன் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இண்டர்போல் மூலம் பிடிக்க தமிழக போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மொட்டை கிருஷ்ணன் சிங்கப்பூரில் 10 நாட்கள் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அவரை பிடிக்க நேற்று லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையில், இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா, மொட்டை கிருஷ்ணனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து நெல்சனின் மனைவியிடமும், நெல்சனிடமும் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என இயக்குநர் நெல்சன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
"ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. விசாரணைக்கு ஆஜராகுமாறு தனது வீட்டுக்கு வந்து எந்த போலீசும் தனக்கு சம்மன் கொடுக்கவில்லை. இதுவரை காவல்துறையிலிருந்து என் வாழ்நாளில் எந்த ஒரு தொலைபேசியிலோ அல்லது நேரிலோ அழைப்பு வந்ததே இல்லை. காவல்துறையின் எந்த அதிகாரியிடம் எனது இந்த விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.