< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் செல்ல ஆசை: தோழியின் திருமணத்துக்கு சென்ற காதல் ஜோடி - அடுத்து நடந்த கொடூரம்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் செல்ல ஆசை: தோழியின் திருமணத்துக்கு சென்ற காதல் ஜோடி - அடுத்து நடந்த கொடூரம்

தினத்தந்தி
|
28 May 2024 4:16 AM IST

மதுரையில் இருந்து சிவகங்கைக்கு மோட்டார்சைக்கிளில் சென்ற காதல் ஜோடி, அங்கு நடந்த தோழியின் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

மதுரை,

மதுரை மாவட்டம் ஆண்டார்கொட்டாரம், பிள்ளையேந்தல் பகுதியை சேர்ந்தவர் போஸ். இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 29). இவரும், சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த பவித்ரா (24) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

பவித்ராவின் தோழி திருமணம் சிவகங்கையில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து பவித்ரா மதுரை வந்திருந்தார். பின்னர் அவர் தன்னுடைய காதலரான முத்துக்குமாருடன் மோட்டார்சைக்கிளில் செல்ல ஆசைப்பட்டார். அதன்படி, அவர்கள் இருவரும் மதுரையில் இருந்து சிவகங்கைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று, அங்கு நடந்த தோழியின் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

திருமணத்தை முடித்துவிட்டு இரவு அங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டனர். இரவு 9.30 மணியளவில் சிவகங்கை-மதுரை சாலையில் உறங்கான்பட்டியில் வந்தபோது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் கீழே விழுந்த அவர்கள் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே பவித்ரா பரிதாபமாக இறந்தார்.

அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துக்குமாரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் முத்துக்குமாரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தவிபத்து தொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும், அதன் டிரைவரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்