நீட் தேர்வு குறித்த விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது: செல்வப்பெருந்தகை
|நீட் தேர்வால் பல்வேறு மாணவ , மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர் என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.
சென்னை,
த.வெ.க. தலைவரான நடிகர் விஜய், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார். முதற்கட்டமாக, கடந்த 28-ம் தேதி திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார்.
2-ம் கட்டமாக இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் நீட் தேர்வு குறித்து விஜய் பேசியதாவது;- நீட் தேர்வால் பல்வேறு மாணவ , மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. மாநில கல்வியில் பயின்றுவிட்டு தேசிய கல்வியில் தேர்வு எழுத சொல்வது அநீதி. நீட் தேர்வில் உள்ள மூன்று பிரச்சனைகள் என்னவென்றால் மாநில உரிமைக்கு எதிராக உள்ளது.
நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவை கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். காலதாமதம் செய்யாமல் மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். நிரந்தர தீர்வாக பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை நீக்கி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். மாநில அரசுக்கு கல்வி, சுகாதாரத்தில் முழு சுதந்திரத்தை தர வேண்டும். என கூறினார்.
இந்த நிலையில் நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜய் பேச்சு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "மாணவ செல்வங்களின் எதிர்காலத்தை சிதைக்கும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மக்கள் தலைவர் ராகுல் காந்தியின் கூற்றை பிரதிபலித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கருத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது. தமிழக மக்களின் நலனில் அக்கறையுள்ள அனைத்து கட்சிகளும் ஒரு அணியிலும் பாசிச பாஜக மட்டும் தனியாக உள்ளதையும் மக்கள் நன்கு அறிந்து விரைவில் பாஜகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.