நாகை - இலங்கை இடையே 16-ந்தேதி முதல் கப்பல் சேவை தொடக்கம்
|இன்று நள்ளிரவு முதல் முன்பதிவு தொடங்கப்படும் என படகு இயக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம்,
நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு வரும் 16-ந் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது.
இதன்படி வரும் வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை என்ற கப்பல் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட உள்ளது. இந்த சிவகங்கை கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நபருக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பயணிக்க ஒரு நபருக்கு 7,500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த கப்பலில் பயணிகளுக்கு துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நபர் 60 கிலோ வரை பார்சல் எடுத்துச் செல்லவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இணைய வழி மற்றும் செயலி மூலம் இன்று நள்ளிரவு முதல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று படகு இயக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.