கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய வசூல் - பெண் பக்தர் புகார்
|மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக ஜெயசீலாவிடம் கூறினார்.
சிதம்பரம்,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக தீட்சிதர்கள் மீது ஜெயஷீலா என்ற பெண் பக்தர் புகார் அளித்துள்ளார்.
சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் நேற்று இரவு சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டை சேர்ந்த ஜெயபால் மகள் ஜெயசீலா (39), என்பவர் புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், நேற்று மாலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றேன், அப்போது அங்கிருக்கும் தீட்சிதர்கள் பக்தர்களிடம் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய ரூ.200 வசூலித்துக்கொண்டிருந்தனர். கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு ஏன் 200 ரூபாய் வசூல் செய்கிறீர்கள் என்ற கேட்டபோது, அங்கு இருக்கும் சில தீட்சிதர்கள் உன்னால் முடிந்தததை பார்த்துக்கொள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என மனுவில் கூறியுள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஏற்கனவே வேறொரு குற்றச்சாட்டு சம்பந்தமாக ஜெயஷீலா அளித்த புகாரில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.