< Back
மாநில செய்திகள்
கோவை மேயர் கல்பனா ராஜினாமா
மாநில செய்திகள்

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ராஜினாமா

தினத்தந்தி
|
3 July 2024 4:52 PM IST

மாமன்ற கூட்டங்களில் தி.மு.க.கவுன்சிலர்களே சில நேரங்களில் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கோவை,

தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.

கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.

இந்தநிலையில் மேயர் கல்பனா தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், இதுதொடர்பான கடிதத்தை அவர் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் கோவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில், கோவை மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து தி.மு.க.,வை சேர்ந்த கல்பனா ராஜினாமா செய்துள்ளார். கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதத்தை மேயர் கல்பனா வழங்கினார். கோவையின் முதல் பெண் மேயரான கல்பனா மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அவர் பதவி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, கோவை மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து தி.மு.க.,வை சேர்ந்த கல்பனா தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்