மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் காவலர்களுக்கு 3 ஆண்டுகள் சொந்த ஊரில் பணி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் காவலர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு சொந்த ஊர் பகுதியிலேயே பணி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னையில் காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை மந்திரி பதக்கங்கள் மற்றும் முதல்-அமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்கினார்.
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது முதல்-அமைச்சர் கூறியதாவது,
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு 1 ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கபடுகிறது. மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள் அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக கோரிக்கைகள் வைத்து வந்தனர். பெண் காவலர்களின் கோரிக்கையை ஏற்று மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் காவலர்களுக்கு பணி மூப்பிற்கு விலக்கு அளித்து அவர்களின் பெற்றோரோ அவரது கணவர் வீட்டை சார்ந்தவர்களோ வசிக்கும் சொந்த ஊர் பகுதிகளிலேயே அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பெண்கள், குழந்தைகளை பாதிக்கக்கூடிய குற்றச்செயல்களை தடுப்பதில் பெண் காவலர்கள் முக்கிய பணியாற்றி வருகின்றனர்.
பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரித்து தீர்ப்பதற்கு பெண் காவலர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
மக்களை காப்பாற்றுதல் உங்கள் கடமை, மக்களை பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. அதை எந்த குறையுமின்றி நிறைவேற்றி தரவேண்டும் என்பது எனது வேண்டுகோள். பதக்கங்களுக்கு பின்னால் உள்ள உங்கள் உழைப்பு தலை வணங்கத்தக்கது. அமைதியான மாநிலத்தில்தான் வளமும், வளர்ச்சியும் இருக்கும். இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாடு பெருமைமிகு மாநிலமாக திகழ காவல்துறையின் பங்கு முக்கியமானது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால்தான் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது
இவ்வாறு அவர் கூறினார்.