வாணியம்பாடியில் திருவிழாவின்போது மோதல் - இளைஞர் குத்திக்கொலை
|ஒரு தரப்பினர் வசிக்கும் வி.எஸ்.கே. காலனி பகுதியில் வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வி.எஸ்.கே. காலனி பகுதியில் நேற்று கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது காமராஜபுரம் மற்றும் வி.எஸ்.கே. காலனி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அப்பு என்கிற சந்துரு (வயது 19) என்பவரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வி.எஸ்.கே. காலனி பகுதிக்குள் புகுந்து அங்கிருந்த ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோணாமேடு பகுதியில் அம்பேத்கர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கச்சேரி ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு திரண்டு அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு எஸ்.பி. ஸ்ரேயா குப்தா நேரில் விசாரணை நடத்தி வருகிறார். இரு பகுதிகளிலும் பதற்றம் நிலவியதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். வி.எஸ்.கே. காலனி பகுதியில் வீடுகள், வாகனங்கள் சூறையாடப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.