< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை 3 மணிக்கு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் உத்தரவு
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை 3 மணிக்கு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் உத்தரவு

தினத்தந்தி
|
28 July 2024 12:25 PM IST

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

சேலம்,

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து 1 லட்சத்து 66 ஆயிரத்து 234 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று காலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 1.47 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

அணையில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 109.20 அடியாகவும், நீர் இருப்பு 77.27 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை செயலாளர் மணிவாசகன், டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவருவதால் எப்போது தண்ணீர் திறக்கலாம்?, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று மாலை 3 மணிக்கு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்