ஐஸ்வர்யா-உமாபதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|சென்னையில் நேற்று ஐஸ்வர்யா-உமாபதி தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா 'பட்டத்து யானை' என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னட மொழிகளில் வெளியான 'சொல்லி விடவா' படத்திலும் நடித்து இருந்தார்.
குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, சேரன் இயக்கிய திருமணம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானவர் உமாபதி. நிகழ்ச்சியில் உமாபதியின் நற்குணம் அர்ஜுனுக்குப் பிடித்துப் போக தனது வீட்டு மாப்பிள்ளையாக பச்சைக் கொடி காட்டினார்.
நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த 10-ம் தேதி ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், சென்னையில் நேற்று இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு தம்பதியை வாழ்த்தினர். மேலும், அதில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.