< Back
மாநில செய்திகள்
கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம்
மாநில செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில்: கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
10 July 2024 12:58 PM IST

நாளை தேரோட்டமும், நாளை மறுநாள் ஆனி திருமஞ்சனம் தரிசன விழாவும் நடைபெற உள்ளது.

கடலூர்,

சிதம்பரம் நடராஜர் கோவிலில், இன்று முதல் மூன்று நாட்கள் ஆனி திருமஞ்சன விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அந்த அரசாணைக்கு தடை எதுவும் விதிக்கவில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், கனகசபையில் இருந்து எத்தனை பேர் சாமி தரிசனம் செய்ய முடியும்?'' என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு அறநிலையத்துறை தரப்பு வக்கீல், '5 நிமிடத்துக்கு 12 பேர் தரிசனம் செய்யலாம்'' என்றார். உடனே நீதிபதிகள், 'அப்படியென்றால், ஒரு மணி நேரத்துக்கு 144 பக்தர்கள் மட்டுமே வழிபாடு நடத்த முடியும்? அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும்போது, அதை எப்படி சமாளிப்பீர்கள்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

''முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்தான் பக்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்'' என்று அறநிலையத்துறைத் தரப்பு வக்கீல் விளக்கம் அளித்தார். இவற்றையெல்லாம் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், 'கனகசபையில் நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அதனால், பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

இதில் விதிமீறல்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். யாராவது சாமி தரிசனத்தை தடுக்கும் விதமாக சட்டத்தை கையில் எடுத்து செயல்பட்டால், அவர்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் அறநிலையத்துறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இன்று காலை முதல் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்