சிதம்பரம் நடராஜர் கோவில்: வரவு, செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
|சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரவு, செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சிதம்பரம் நடராஜர் கோவில் 2008 ம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த போது 3 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதால் கோவிலில் வருவாய் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், கோவில் நிர்வாகம் தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பின் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கோவிலின் கணக்கில் செலுத்தாமல் தீட்சிதர்கள் எடுத்துச் செல்வதாக குற்றம் சாட்டப்பட்டது.
தீட்சிதர்களின் தவறான நிர்வாகம் காரணமாக கோவிலின் வருமானம் பெருமளவு குறைந்து விட்டதால் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள காலத்தில் வந்த வருமான குறித்த கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் இருந்தபோது, பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. பூஜைகள், அர்ச்சனை, தரிசனத்துக்கு டிக்கெட் அடித்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன் காரணமாகவே அதிக வருவாய் கிடைத்தது என்று தெரிவித்தார். கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு உண்டியல் அகற்றப்பட்டுவிட்டது. பூஜை, அர்ச்சனை மற்றும் தரிசனத்திற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டார். மேலும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை தீட்சிதர்கள் எடுத்துச் செல்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிதம்பரம் கோவில் பராமரிப்பு மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க என்ன வருவாய் ஆதாரம் உள்ளது என்று கேள்வி எழுப்பினர். மேலும் கோவில் காணிக்கை தவிர தீட்சிதர்களுக்கு வேறு வருவாய் ஆதாரங்கள் உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உண்டியல் எப்போது அகற்றப்பட்டது? பூஜை அர்ச்சனை தரிசனத்திற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது இல்லையா என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் தீட்சிதர்கள் தரப்பில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு 2014- 2015 முதல் 2023-24 ம் ஆண்டுகள் வரையிலான வருமானம் செலவு குறித்த கணக்கு புத்தகங்களை வரும் 19-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.