சென்னையில் நாளை மின்சார ரெயில் சேவை ரத்து
|சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு சம்பர்க் கிராண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12651) நாளை முதல் செங்கல்பட்டு, மேல்பாக்கம், அரக்கோணம், பெரம்பூர், கொருக்குப்பேட்டை வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரம், சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களில் நிற்காது.
திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (09420) நாளை முதல் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும். செங்கல்பட்டில் இருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17651) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.
செங்கல்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17643) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12615) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12759) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் அனைத்தும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் நிற்காது. சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்லும்.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை காலை 7.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, காலை 9.20 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 24 சிறப்பு மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.