தமிழ்நாட்டிற்கு காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
|காவிரி விவகாரத்தில் நமது உரிமைகளை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தின் குடகு மலை மற்றும் கேரள மாநிலத்தின் வயநாடு பகுதிகளில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி. கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதுமட்டுமின்றி, கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. மொத்தம் 19.52 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட கபினி அணை நிரம்புவதற்கு இன்னும் ஒரு டி.எம்.சி தண்ணீர் மட்டுமே தேவை. இதே அளவில் நீர்வரத்து தொடர்ந்தால், அடுத்த இரு நாட்களில் கபினி அணை நிரம்பி விடும் வாய்ப்பு உள்ளது. இம்மாத இறுதிக்குள் நான்கு அணைகளும் நிரம்பும் வாய்ப்பு இருப்பதாக கர்நாடக நீர்வளத்துறை பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
கர்நாடகத்தில் காவிரி அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தான் நியாயம் ஆகும். ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் விடுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாத கர்நாடக அரசு, வரும் 8-ம் தேதி முதல் கர்நாடக பாசனத்திற்காக பாசனக் கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது. இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இதன் மூலம் காவிரி சிக்கலில் கர்நாடகம் வழக்கம் போல், அதன் உண்மை முகத்தைக் காட்டியுள்ளது.
காவிரி நீர்ப்பகிர்வு வழக்கில் 2018-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி, ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி என இம்மாத இறுதிக்குள்ளாக 44 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும். ஆனால், இதுவரை ஒரு டி.எம்.சி தண்ணீரைக் கூட தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்கவில்லை. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது.
காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான தமது கடமையை கர்நாடக அரசு உணர மறுப்பதும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காமல் இருக்கும் தண்ணீர் முழுவதையும் தாங்களே பயன்படுத்திக்கொள்ளத் துடிப்பதும் நியாயமற்றதாகும். கர்நாடகத்தின் இந்த செயல்களை கண்டு கொள்ளாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும், கர்நாடகத்திடமிருந்து காவிரியில் தண்ணீர் பெற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதி காப்பதும் காவிரி பாசன மாவட்ட உழவர்களூக்கு இழைக்கப்படும் துரோகம். இதை அனுமதிக்க முடியாது.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்து விட்டு, உறங்கும் போக்கை கைவிட்டு, நமது உரிமைகளை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகி, தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி வலியுறுத்த வேண்டும். அதன் மூலம் காவிரி டெல்டா உழவர்களை அரசு காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.