< Back
மாநில செய்திகள்
காவிரி நீர் விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்
மாநில செய்திகள்

காவிரி நீர் விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
16 July 2024 5:54 AM IST

காவிரி நீர் விவகார பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை பங்கிட்டு அளிப்பதில் கர்நாடக அரசு முரண்டு பிடிப்பது தொடர் கதையாக இருக்கிறது. இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. காவிரி விவகாரத்தில் இரு மாநில உறவிலும் பாதிப்பு ஏற்பட்டதால், இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. மத்திய அரசு அதிகாரிகள் தலைமையிலான இந்த குழுவில் இரு மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் கடந்த 11-ம் தேதி அன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் 20 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.

இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தாரமையா அம்மாநில உயர் அதிகாரிகள், சட்ட நிபுணர்களுடன் கடந்த 12-ம் தேதி அன்று அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். கூட்டத்திற்கு பின்னர் சித்தராமையா கூறுகையில் 'காவிரி அணைகளில் 60 டி எம் சி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது. இது எங்கள் மாநில விவசாய பணிகளுக்கு தேவைப்படுகிறது. எனவே இந்த மாத இறுதி வரையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது. இது தொடர்பாக கர்நாடகா அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்டி தீர்மானிக்கப்படும்' என்று கூறினார்.

அதன்படி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்துக்கு தினமும் ஒரு டி எம் சி தண்ணீர் திறந்து விடுவதற்கு பதிலாக, வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த தகவலை முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர், காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்றும் கூறினார்.

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று அறிவித்துள்ள கர்நாடகா அரசுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கும் உத்தரவிட்டார்.

அதன்படி, காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுனர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்