< Back
மாநில செய்திகள்
காவிரி விவகாரம்: அனைத்து கட்சிகள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்பு
மாநில செய்திகள்

காவிரி விவகாரம்: அனைத்து கட்சிகள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்பு

தினத்தந்தி
|
16 July 2024 11:24 AM IST

அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் பங்கேற்றுள்ளனர்.

பெங்களூரு,

காவிரியில் தமிழ்நாட்டுக்கு 12 முதல் 31-ந்தேதி வரை 20 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று அறிவித்தது.

இதற்கிடையில், பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது என்றும், 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுமென்றும் சித்தராமையா தெரிவித்து இருந்தார்.

இதற்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததுடன், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுனர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

கூட்டத்தில் கட்சிகள் சார்பில் பங்கேற்றுள்ளவர்கள் யார்?

காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, மதிமுக சார்பில் பூமிநாதன், இந்திய கம்ப்யூனிஸ்ட் சார்பில் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் சார்பில் நாகை மாலி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்