சாதிவாரி கணக்கெடுப்பு: சட்டசபையில் காரசார விவாதம்
|சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என சட்டசபையில் விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 4-வது நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் , சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்து பேசுகையில், இட ஒதுக்கீட்டிற்கு அரசு எந்த விதத்திலும் தடையாக இல்லை. சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஏதுவாக இருக்கும்.10.5% தரவுகள் இல்லாததால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 10.5% இடஒதுக்கீடு தொடர்பான தரவுகளை பெற்றுத்தர நீதியரசர் பாரதிதாசன் குழுவை அமைத்துள்ளோம். என கூறினார்.
இதையடுத்து சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது:-
இப்போது நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடுமுழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்கு பிறகுதான் இதை அமல்படுத்த முடியும். ஏற்கெனவே, பீகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் உறுப்பினர் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
உறுப்பினர் ஜி.கே.மணி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமென இங்கே பேசி, அதற்கு நம்முடைய அமைச்சர் பெருமக்கள் உரிய விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று சொன்னால், சாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மத்திய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தை விரைவில் கொண்டுவரலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதற்கு பாமக ஆதரவு தரவேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். என கூறினார்.
அதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும்; மாநில அரசு நடத்த முடியாது என கூறினார். இதனால் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.