ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு - நாளை விசாரணை
|ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு நாளை விசாரிக்கப்பட உள்ளது.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிகோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை நல்லடக்கம் செய்ய எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நாளை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.