ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு
|சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. செம்பியத்தில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.