அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்: முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
|அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 15-9-2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.
இத்திட்டத்திற்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பையும், மாணவ-மாணவியர் இடையே ஏற்பட்ட எழுச்சியினையும் கருத்தில் கொண்டு 25-8-2023 அன்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த ஊராகிய திருக்குவளையில் முதல்-அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும், சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப்பாடங்களில் கவனம் செலுத்தி படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் இத்திட்டம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின், இன்று (திங்கட்கிழமை) பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள். முதல்-அமைச்சரால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் செயல்படுத்தப்படும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் உலகிற்கே முன்னோடியான திட்டமாக திகழ்கிறது.
இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொள்வார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.