சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 4 பேர் உயிரிழப்பு
|விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பந்துவார்பட்டி கிராமத்தில் உள்ளது.
இந்த பட்டாசு ஆலை மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 15-க்கும் மேற்பட்ட அறைகளில் 50க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆலையில் வழக்கம்போல இன்று காலை பட்டாசு தயாரிக்க ஆயத்தப் பணியாக பட்டாசு மருந்துகள் கலக்கும் பணியில் அச்சங்குளம் மற்றும் நடுச்சூரங்குடியைச் சேர்ந்த 4 பேர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது பட்டாசு மருந்து ஊராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் 3க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாயின. மேலும், இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.