< Back
மாநில செய்திகள்
விஷ சாராய விவகாரத்தை கண்டித்து சட்டசபையில் இருந்து பா.ஜனதா வெளிநடப்பு
மாநில செய்திகள்

விஷ சாராய விவகாரத்தை கண்டித்து சட்டசபையில் இருந்து பா.ஜனதா வெளிநடப்பு

தினத்தந்தி
|
21 Jun 2024 12:39 PM IST

விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுக, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சென்னை,

தமிழக சட்டசபையில் 2-ம் நாள் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், விஷ சாராய விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து சட்டசபையில் இருந்து அதிமுகவினரை அவைக்காவலர்கள் வெளியேற்றினர். இதன் காரணமாக அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுகவை தொடர்ந்து பா.ஜனதாவும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது. நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி ஆகியோர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

"கல்வராயன் மலைப்பகுதியில் காலம் காலமாக நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே இது போல மெத்தனால் குடித்து உயிரிழந்தார்கள். எங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் மெத்தனால் வருகிறது என காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்லவில்லை. திமுக அரசு கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறி இருக்கிறது. போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தை பார்க்கையில் போதைப்பொருள் புழக்கத்தை அரசு இன்னும் கட்டுப்படுத்தவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது." என்றார்.

மேலும் செய்திகள்