பா.ஜனதா மாவட்ட நிர்வாகிகள் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்
|பா.ஜனதா மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கே.அகோரம் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
சென்னை,
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இருந்து வருகிறார்கள். இவர் தொடர்பாக, ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக மிரட்டல் விடுத்த வழக்கில், பா.ஜனதா மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கே.அகோரம் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து அகோரத்தை விடுவித்து, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், திருவாரூர் மாவட்ட பா.ஜனதா விவசாய அணியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த மதுசூதனன் என்பவரை, திருவாரூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் பாஸ்கர், பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகியோர் கடந்த மாதம் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் பாஸ்கர், பொதுச் செயலாளர் செந்திலசரன் ஆகியோரை கட்சி பொறுப்பில் இருந்து விடுவித்து மாநில தலைவர் அண்ணாமலை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.