காதலியை திருமணம் செய்த 2 நாளில் வங்கி ஊழியர் தற்கொலை
|காட்டுப்பகுதியில் உள்ள மரத்தில் வங்கி ஊழியர் பிணமாக தொங்கினார்.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சதுப்பேரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சொரக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் மகன் அஜித் (வயது 23). விவசாயியான தமிழரசன் பைனான்சும் நடத்தி வருகிறார். மகன் அஜித் ஆரணி சூரியகுளம் அருகே உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார்.
இவருக்கும் சென்னை ஓடக்கரம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஊட்டியை சேர்ந்த ஜான்சன் மகள் ராதிகா என்ற பெண்ணுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. கடந்த 3-ந் தேதி ராதிகாவை அஜித் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர் மகன் அஜித்துக்கும் ராதிகாவிற்கும் குலதெய்வமான தச்சரம்பட்டு பகுதியில் உள்ள நரசிம்மர் கோவிலில் தமிழரசன் திருமணம் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து 5-ந் தேதி காலையில் பதிவு திருமணம் செய்து கொள்ள விசாரித்து விட்டு வருவதாக அஜித் தனியாக சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அது குறித்து ஆரணி தாலுகா போலீசில் தமிழரசன் புகார் அளித்தார். அதன் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராணி வழக்குப் பதிவு செய்து தேடி வந்தார்.
இந்த நிலையில் போளூரிலிருந்து ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் அத்திமூரை அடுத்த வதியன்கொட்டாய் காட்டுப்பகுதியில் வாலிபர் ஒருவர் பிணம் மரத்தில் தொங்குவதாக தகவல் கிடைத்தது. உடலை போளூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் மாயமான அஜித்தின் படத்தை ஆரணி போலீசார் அனுப்பி விசாரித்ததில் தற்கொலை செய்து கொண்டது அஜித் என்பது தெரியவந்தது.
காதலியை கரம்பிடிக்க உறுதியாக இருந்த அஜித் அவரையே திருமணம் செய்த இரண்டே நாட்களில் தற்கொலை செய்து கொண்டது மனைவியை புரியாததால் ஏற்பட்ட பிரச்சினையா அல்லது கடன் பிரச்சனையா, நண்பர்களால் ஏற்பட்ட தகராறா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும், ஏற்படுத்தி உள்ளது.