மோசமான வானிலை: கோழிக்கோடு புறப்பட்ட விமானம் கோவையில் தரையிறக்கம்
|கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதால் பயணிகள் சிறிதுநேரம் எதுவும் புரியாமல் குழம்பினர்.
கோவை,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை 5.40 மணிக்கு, ஏர் இந்தியா விமானம் 141 பயணிகளுடன் சார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறால் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் இரவு 8.10 மணி வரை விமானம் திருச்சி எல்லைப்பகுதிகளில் வட்டமிட்டது. சுமார் 2½ மணி நேரத்துக்கும் பிறகு எரிபொருள் தீர்ந்ததும் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கோழிக்கோடு வந்த விமானம், மோசமான வானிலை காரணமாக கோவை விமானநிலையத்தில் அவசரமாக தரையிரங்கிய சம்பவம் நிகழ்ந்து உள்ளது. அதன்விவரம் வருமாறு:-
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி நேற்று காலை 7 மணிக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 164 பயணிகள் இருந்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க விமானம் தயாரானது. அப்போது வானிலை மிகவும் மோசமாக இருந்தது. அதன் காரணமாக அரைமணி நேரமாக அந்த விமானம் வானிலேயே வட்டம் அடித்தது.
இதையடுத்து அந்த விமானம் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. காலை 7.45 மணியளவில் அந்த விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது. திடீரென கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதால் பயணிகள் சிறிதுநேரம் எதுவும் புரியாமல் குழம்பி போயினர். பின்னர் நிலைமை அறிந்து சமாதானம் ஆகினர். பின்னர் வானிலை சீரானதால் அந்த விமானம் காலை 10 மணிக்கு மீண்டும் கோழிக்கோடு புறப்பட்டு சென்றது.