< Back
மாநில செய்திகள்
சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தது: 34 சட்டத்திருத்த மசோதாக்கள், 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மாநில செய்திகள்

சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தது: 34 சட்டத்திருத்த மசோதாக்கள், 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தினத்தந்தி
|
30 Jun 2024 8:28 AM IST

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 20-ந் தேதி கூடியது. 21-ந் தேதியில் இருந்து அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதங்களும் நடைபெற்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இப்படி பல்வேறு அறிவிப்புகள் மற்றும் பரபரப்புடன் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. 9 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை கூட்டத்தொடரின் நிறைவாக, முக்கிய நிகழ்வுகள் குறித்து சபாநாயகர் அப்பாவு பேசினார்.

அப்போது சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 34 சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. மேலும் அரசு சார்பில் அதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதனை நடைமுறைப்படுத்தக்கூடாது. மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்தே நடத்த வேண்டும், 'நீட்' விலக்கு மசோதாவிற்கு மத்திய அரசு உடனடி ஒப்புதல் தரவேண்டும் உள்பட 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சட்டசபை 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் ஊரக சாலைகள் சீரமைப்பது, 75 ஆயிரம் அரசு காலிபணியிடங்களை வருகிற 2026-ம் ஆண்டு ஜனவரிக்குள் நிரப்புவது, ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது, திருச்சியில் கலைஞர் நூலகம் கட்டுவது, ரூ.1,146 கோடி செலவில் 6 ஆயிரத்து 746 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது ஆகிய 5 அறிவிப்புகளை வெளியிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்