< Back
மாநில செய்திகள்
தொடர் அமளி: சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்
மாநில செய்திகள்

தொடர் அமளி: சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

தினத்தந்தி
|
26 Jun 2024 4:22 AM GMT

இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் கடந்த 3 நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்திலும் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

8 நிமிடங்கள் அவையை நடக்கவிடாமல் செய்து இருக்கிறீர்கள். இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன். கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என கூறினார். சபாநாயகர் கூறியதை தொடர்ந்தும் அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததால் பேரவை விதிகளின்படி அதிமுகவினர் மீது சபாநாயகர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானத்தை முன்மொழிந்தார். அவை முன்னவரின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்