< Back
மாநில செய்திகள்
காலம் உள்ளவரை கலைஞர் நவீன கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார்
மாநில செய்திகள்

"காலம் உள்ளவரை கலைஞர்" நவீன கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார்

தினத்தந்தி
|
9 Jun 2024 10:42 AM GMT

"காலம் உள்ளவரை கலைஞர்" நவீன கண்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாபெரும் பிரம்மாண்ட மெய்நிகர் அரங்கம், கலைஞரை மீண்டும் நேரில் சந்திக்கும் ஆச்சர்ய அனுபவத்தை தூண்டும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க "காலம் உள்ளவரை கலைஞர்" நவீன கண்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

இப்பிரம்மாண்ட அரங்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான "திருவாரூரில் ஆரம்பித்து சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை" என நூற்றுக்கும் மேற்பட்ட அரிய வகை புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சி அரங்கிற்குள் உள்ளே நுழைந்ததும் முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் கூடிய 40 வயது தோற்றத்துடன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நேரடியாக மக்களுடன் தமிழை போற்றி பேசும் கவிதை காவியம் இடம்பெற்றுள்ளது. "வாழும் வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரின் கதைப்பாடல்" காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மற்றொரு அரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் எப்போதும் அவர் விரும்பும் முரசொலி அலுவலகத்தில் உரையாடுவதுபோல் ஒரு 'செல்பி பாயிண்ட்' மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எடுக்கப்படும் செல்பி புகைப்படங்கள் குறுஞ்செய்தியாக பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.

மேலும், ஒரு அரங்கில் மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் 3டி கேமராவில் பதிவு செய்த கலைஞரின் வரலாற்று காவியமும் கலைஞர் வழியில் தொடரும் திராவிட அரசை மக்கள் போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கம் திறக்கப்பட்ட நாள் முதல் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமை கட்சி தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், ஆதீனங்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர் வருகை தந்து கலைஞருடைய வாழ்க்கை வராலாறு, அரசியல் பயணம் போன்ற முக்கிய சாதனைகள் அனைத்தையும் விளக்கும் குறும்படங்கள், பல்வேறு துறைகளில் அவர் புரிந்த சாதனைகளை குறித்து ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

"காலம் உள்ளவரை கலைஞர்" நவீன கண்காட்சியகத்தை இன்று பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இக்கண்காட்சியகத்தை ஏற்பாடு செய்த இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, குறும்படத் தயாரிப்புக்கு உதவிய கவிஞர் பா.விஜய், புகைப்படங்களை வடிவமைத்த அரசு ஆர்ட்ஸ் கோபி, மெய்நிகர் பரிமாண தொழில்நுட்பத்திற்கு உதவிய பாரதி மற்றும் கண்காட்சிக்கு உதவிய அனைவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, பி. வில்சன், திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன், கவிஞர் பா.விஜய் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்