< Back
மாநில செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:  ரவுடி சீசிங் ராஜாவை நெருங்கியது தனிப்படை
மாநில செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சீசிங் ராஜாவை நெருங்கியது தனிப்படை

தினத்தந்தி
|
22 July 2024 5:12 PM IST

சென்னையை அதிர வைத்த கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரவுடிகள் சம்போ செந்தில்,சீசிங் ராஜாவை பிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகிறது.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி கூலிப்படையால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பல்வேறு ரவுடி கும்பல் ஒன்று சேர்ந்து அவரை கொலை செய்து உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை யில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. பா.ஜ.க முன்னாள் நிர்வாகி அஞ்சலை உள்பட இது வரையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆற்காடு சுரேஷ் கொலையின் பின்னணியில் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடந்துள்ளது. இந்த தகவலை தொடர்ந்து மேலும் 4 ரவுடிகளுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் ஆம்ஸ்ட் ராங் கூட்டாளி பாம் சரவணனை தீர்த்துக்கட்ட சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகிய இருவரும் தருணம் பார்த்து காத்திருப்பதால் அவர் களை கைது செய்ய தனிப் படை போலீசார் ஆந்திர மாநிலம் விரைந்துள்ளனர். இதுபற்றி தனிப்படை போலீசார் கூறியதாவது:-

ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமாக செயல்பட்டவர் பாம் சரவணன் (41). இவர் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் இவர் மீது 6 கொலைகள், கட்ட பஞ்சாயத்து, ஆள் கடத்தல், அடிதடி என 26-க்கும் மேற் பட்ட வழக்குகள் உள்ளன. பாம் சரவணனின் அண்ணன் தென்னரசுவை தொழில் போட்டி காரணமாக ரவுடி ஆற்காடு சுரேஷ் தீர்த்து கட்டினார். அதில் இருந்தே ஆம்ஸ்ட்ராங், பாம் சரவணன் ஆகியோருக்கு ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கோஷ்டியினர் பரம எதிரிகளாக மாறினர். தற்போது வேலூர் சிறையில் உள்ள சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி ஒருவருக்கும் பாம் சரவணனனுக்கும் மோதல் இருந்து வந்தது. வியாசர்பாடி கன்னிகாபுரம் ரெயில்வே கேட் பகுதியில் கொலை திட்டத்தை செயல்படுத்த பதுங்கி இருந்தபோது பாம் சரவணன் கைது செய்யப் பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த பிறகு தலை மறைவாக இருந்து வருகிறார். பாம் சரவணனின் கொலை பட்டியலில் ரவுடிகள் சீசிங் ராஜா, சம்போ செந்தில் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் சிலர் உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி வாங்காமல் விடமாட்டேன் என பாம் சரவணன் தற்போது சபதம் எடுத்துள்ளார். கொலைக்கு பின்னணியில் வட சென்னையை சேர்ந்த சம்போ செந்தில், சீசிங் ராஜா இருப்பதால் அவர்களின் உயிருக்கு குறி வைத்துள்ளார்.

கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த சீசிங் ராஜா மீது கொலை, ஆள் கடத்தல் என 33 வழக்குகள் உள்ளன. இவர் ஆற்காடு சுரேஷின் நிழல் போல செயல்பட்டு வந்தவர். அவரது கொலைக்கு பழி வாங்கியதில், சீசிங் ராஜாவும் முக்கிய பங்கு வகித்து உள்ளார். இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங் கதையை முடிக்கும் பொறுப்பு சம்போ செந்திலிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூர் சிறையில் உள்ள ரவுடியின் சதித் திட்டத்தின் படியே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ளார்.

இதனால் சீசிங் ராஜா, சம்போ செந்தில் இருவரையும் தீர்த்து கட்ட பாம் சரவணன் தருணம் பார்த்து வருகிறார். மீண்டும் ஒரு விபரீதம் நடப்பதற்குள் 3 பேரையும் கைது செய்ய களம் இறங்கி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பதுங்கி இருக்கும் சீசிங் ராஜாவை பிடிக்க தனிப் படை போலீசார் ஆந்திரா சென்றுள்ளனர். அதேபோல, மற்றொரு ரவுடியான சம்போ செந்தில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டா அருகே பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சம்போ செந்திலை பிடிக்க 10 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்