ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் பின்னணி இல்லை - சென்னை காவல் ஆணையர்
|முதற்கட்ட விசாரணையில் இந்த கொலையில் அரசியல் பின்னணி எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொலை சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது சகோதரர் வீரமணி அளித்த புகாரின் பேரில் செம்பியம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க கூடுதல் கமிஷனர் அஸ்ரா கர்க் தலைமையில் 10 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டன.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள், செல்போன் டவர் லொக்கேஷனை பார்வையிட்டனர். கொலை நடைபெற்று 3 மணி நேரத்துக்குள் சந்தேக நபர்கள் 8 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இந்த 8 பேர் தான் கொலையாளி என்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின்போது ஆம்ஸ்ட்ராங்குடன் இருந்த அவரது சகோதரர் வீரமணி, நண்பர் பாலாஜி, கார் டிரைவர் அப்துல் கனி ஆகியோரும் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்தனர். அவர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக முக்கிய இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொலை சம்பவத்தில் மேலும் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது, கத்தி தவிர வேறு என்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன போன்ற விவரங்கள் குறித்து கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கைதானவர்களுக்கு சரியான தண்டனை கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
முதற்கட்ட விசாரணையில் இந்த கொலையில் அரசியல் பின்னணி எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த கொலைக்கான காரணத்தை உடனடியாக பகிர முடியாது. ஏனென்றால் இந்த வழக்கில் சிலர் மீது சந்தேகம் இருக்கிறது. அவர்களை கைது செய்ய வேண்டி உள்ளது. பொன்னை பாலுவின் அண்ணன் ஆற்காடு சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சில சம்பவம் நடைபெற்றது. எனவே அந்த சம்பவம் குறித்தும், பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கைதாகி உள்ள பொன்னை பாலு மீது 8 வழக்குகளும், திருமலை மீது 7 வழக்குகளும், திருவேங்கடம் மீது 2 வழக்குகளும் உள்ளன. சிலர் மீது சில வழக்குகள்தான் இருக்கின்றன. அருள் மீது எந்த வழக்கும் இல்லை. சந்தோஷ் மீது ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு வழக்கு உள்ளது. கொலையான ஆம்ஸ்ட்ராங்க் மீது 7 வழக்குகள் இருந்துள்ளன. அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளன. ஆம்ஸ்ட்ராங்கிற்கு கொலை மிரட்டல் இருந்து வந்ததாக சொல்கிறார்கள். ஆனால் இதுபற்றி எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை.
ஆம்ஸ்ட்ராங்க் பெயரில் துப்பாக்கி லைசென்சு இருக்கிறது. இந்த துப்பாக்கியை வைத்திருப்பதற்கான உரிமத்தை 31.12.2027-ம் ஆண்டு வரை புதுப்பித்து வைத்திருந்தார். நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மார்ச் மாதம் தனது துப்பாக்கியை ஆம்ஸ்ட்ராங்க் ஒப்படைத்திருந்தார். தேர்தல் முடிந்த பின்னர், கடந்த ஜூன் 13-ந்தேதி அன்று மீண்டும் துப்பாக்கியை வாங்கி கொண்டார்.
பொன்னை பாலுவின் சொந்த ஊர் வேலூர், மணிவண்ணன் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர். திருமலையின் வீடு பெரம்பூரில் உள்ளது. இந்த வழக்கில் கைதானவர்களில் தென்மாவட்டங்களை சேர்ந்த ஒருவரும் இல்லை. ஆம்ஸ்ட்ராங் இறுதிச்சடங்கு நிகழ்வுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.