< Back
மாநில செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஆட்டோ ஓட்டுனர் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் - வெளியான அதிர்ச்சி தகவல்
மாநில செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஆட்டோ ஓட்டுனர் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் - வெளியான அதிர்ச்சி தகவல்

தினத்தந்தி
|
6 July 2024 8:02 AM GMT

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் கோரி ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

இந்த சூழலில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் போட்டு கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்த திருமலை, ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதன்பிறகே இந்த கொலை சம்பவம் அரங்கேறி உள்ளது. புன்னை பாலு என்பவர் ஆற்காடு சுரேஷின் தம்பி ஆவார். கைதான புன்னை பாலு போலீசில் அளித்த வாக்குமூலத்தில், அண்ணனைக் கொன்றதோடு ஜெயபால், ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர் என்றும் தொடர் கொலை மிரட்டல் வந்ததால் என் மனைவி பயத்தில் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அண்ணன் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் திட்டமிட்டு கொலை செய்ததாக தெரிவித்தார்.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதால் அவரை எவ்வாறு கொலை செய்வது என திட்டமிட்டு கொடூரமாக தீர்த்துக் கட்டியுள்ளனர். வெட்டும்போது தடுக்க முயன்றால் நாட்டு வெடிகுண்டை வீசி கொலை செய்யவும் தயார் நிலையில் வைத்திருந்தது அம்பலமாகி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி பின்புறமாக இருந்து இடது பக்கமாக கழுத்தில் கொலையாளிகள் வெட்டியுள்ளனர். கணுக்காலில் வெட்டிய பிறகு சராமாரியாக அவரை கொலையாளிகள் வெட்டத் தொடங்கி உள்ளனர். கொலையாளிகள் வெட்டியதில் ஆம்ஸ்ட்ராங்கின் இடது கழுத்தின் மேல் பகுதி, காது, இடது சுண்டு விரல் துண்டானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நெல்லையை சேர்ந்த கூலிப்படையினர் கொலை பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து என உளவுத்துறையும், குற்றப்புலனாய்வு பிரிவும் 3 முறை எச்சரித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் செய்திகள்