ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: போலீசாரிடம் சிக்காமல் தப்பிய ரவுடி சீசிங் ராஜா
|ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் பிடிக்க சென்றபோது தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே கடந்த சில வாரங்களுக்கு முன்பு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ரவுடியான திருவேங்கடம் (33 வயது) என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக கடந்த 14-ந் தேதி மாதவரம் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அப்போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்ட திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜா என்பவரை போலீசார் பிடிக்க சென்றபோது தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் உள்ள அவரது இரண்டாவது மனைவி வீட்டில் பதுங்கி இருந்ததாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
இந்த நிலையில் போலீசார் வருவதை அறிந்த சீசிங் ராஜா போலீசாரை கண்டதும் காரில் தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. காரின் பதிவெண்ணை வைத்து ரவுடி சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் மும்முரமாக தேடி வருகின்றனர். கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த சீசிங் ராஜா மீது கொலை, ஆள் கடத்தல் என 33 வழக்குகள் உள்ளன. இவர் ஆற்காடு சுரேஷின் நிழல் போல செயல்பட்டு வந்தவர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதில் சீசிங் ராஜாவும் முக்கிய பங்கு வகித்து உள்ளார்.