ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: இயக்குனர் நெல்சன் மனைவியிடம் போலீஸ் விசாரணை
|ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேடப்படும் குற்றவாளி குறித்து இயக்குனர் நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன், இது போன்றவர்கள் மட்டுமல்லாது அதிமுக, திமுக, பாஜக, த.மா.கா, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளுக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன். இவர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார். மொட்டை கிருஷ்ணனுடன் செல்போனில் தொடர்பில் இருந்ததாக கூறி இயக்குனர் நெல்சன் மனைவியும், வழக்கறிஞருமான மோனிஷாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மோனிஷாவை தொடர்ந்து நெல்சனிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.