பழனியில் ரோப்கார் சேவை நாளை முதல் நிறுத்தம்
|பழனி முருகன் கோவில் ரோப்காரில் வருடாந்திர பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
பழனி,
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதையை பிரதானமாக பயன்படுத்தி சென்று வருகின்றனர். மேலும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்றுவரும் வகையில் ரோப்கார், மின்இழுவை ரெயில் சேவைகள் உள்ளன. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை விரும்புகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப்கார் சேவை இயக்கப்படுகிறது. மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை ரோப்கார் நிலையத்தில் தினசரி பராமரிப்பு பணி நடைபெறும். அதேபோல் மாதத்துக்கு ஒருநாள், வருடத்துக்கு ஒருமுறை 40 நாட்கள் என ரோப்காரில் பராமரிப்பு பணி நடைபெறும். அப்போது அதன் சேவை நிறுத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு பழனி முருகன் கோவில் ரோப்காரில் வருடாந்திர பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி ரோப்கார் சேவை நாளை முதல் நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில் ஆகியவற்றை பயன்படுத்தி மலைக்கோவில் சென்று வரலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.