< Back
மாநில செய்திகள்
அன்னபூர்ணா நிறுவனர் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டார்: வானதி சீனிவாசன்
மாநில செய்திகள்

அன்னபூர்ணா நிறுவனர் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டார்: வானதி சீனிவாசன்

தினத்தந்தி
|
13 Sept 2024 12:39 PM IST

அன்னபூர்ணா நிறுவனரை மிரட்டி பணிய வைத்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று வானதி சீனிவாசன் கூறினார்.

கோவை,

கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

அவர் பேசும்போது, இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கும் நிலையில், காரத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. வெறும் பண்ணுக்கு ஜி.எஸ்.டி. இல்லை. ஆனால் ஜாமுடன் பண் வாங்கினால் ஜி.எஸ்.டி. உள்ளது. இதுபோன்ற முரண்பாடுகளை களைய வேண்டும் என்று கூறினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

இதையடுத்து நிர்மலா சீதாராமனை அன்னபூர்னா நிறுவனர் சீனிவாசன் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். பின்னர் அவர் தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும், ஓட்டல் தொழிலுக்காக அவ்வாறு கூறியதாகவும் வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு திமுக எம்.பி.கனிமொழி, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோவை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர் சீனிவாசன் தாமாக முன்வந்து மன்னிப்புக் கேட்டார். அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர் சீனிவாசன் எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தார். நான் தப்பாக பேசிவிட்டேன். மத்திய மந்திரியிடம் மன்னிப்பு கேட்பதற்கு நேரம் கொடுங்கள் என்று கேட்டார். பின்னர் ஓட்டலுக்கு வந்த சீனிவாசன், நான் பேசியது தவறு, தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன்; உங்கள் மனது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

தான் பேசியது இணையதளத்தில் வேறுமாதிரி சொல்வதாக வருத்தம் தெரிவிப்பதாக சீனிவாசன் கூறினார். அன்னபூர்ணா ஓட்டலுக்கு சென்று நான் ஜிலேபி சாப்பிட்டு பிரச்சினை செய்ததாக சீனிவாசன் கூறினார். நான் இதுவரை அன்னபூர்ணா ஓட்டலில் ஜிலேபி சாப்பிட்டதோ, பிரச்சினையில் ஈடுபட்டதோ இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்