அம்மா உணவகங்களை மூடும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
|அம்மா உணவகங்களை மூட திமுக அரசு கொடுக்கும் மறைமுக அழுத்தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சென்னை ராஜீவ்காந்தி, எழும்பூர், ஸ்டான்லி, .கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 7 அரசு மருத்துவமனைகளில் இயங்கிவரும் அம்மா உணவகங்களுக்கு குடிநீர் இணைப்பை துண்டித்து, அவற்றை நிரந்தரமாக மூடுவதற்கு மருத்துவமனை நிர்வாகங்கள் மறைமுக அழுத்தங்கள் கொடுப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் அம்மா உணவகங்களை மூட நிர்பந்திக்கும் மருத்துவமனை நிர்வாகங்களின் மனிதநேயமற்ற நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
ஏழை, எளிய மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர்கள் என பல்வேறு தரப்பினரின் பசியைப் போக்க தொலைநோக்கு சிந்தனையுடன் இதயதெய்வம் அம்மா அவர்கள் தொடங்கி வைத்த அம்மா உணவகங்களை மூட திமுக அரசு கொடுக்கும் மறைமுக அழுத்தங்கள் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன.
எனவே, அண்டை மாநிலங்களுக்கும் முன்னோடித் திட்டமாக திகழும் அம்மா உணவகங்களை மூடும் நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, போதுமான நிதியை ஒதுக்கி ஏழை, எளிய மக்கள் தொடர்ந்து பயன்பெறும் வகையில் அவற்றின் உட்கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்தி அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.