2026-ல் சட்டசபை தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி பதில்
|தேசிய கட்சிகள் வெற்றி பெரும் வரை நம்மை பயன்படுத்திக் கொள்கின்றனர். பின்னர் கண்டுகொள்வதில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம்,
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி மொத்தமாக அள்ளி விட்டது. அவர்களை எதிர்த்து களம் கண்ட அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மொத்தம் 46.97 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 23.05 சதவீதமும், பா.ஜனதா 18.28 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.
இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல் முறையாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
சட்டமன்ற தேர்தலுக்கும், மக்களவை தேர்தலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சட்டமன்ற தேர்தல் வந்தால் மக்கள் எங்களுக்கு சாதகமாக வாக்களிப்பார்கள். திமுக – அதிமுக இரண்டு கட்சிகளுமே மாறி மாறி வெற்றி தோல்வியைக் கண்டு வருகின்றன.
பா.ஜனதாவுடன் கூட்டணி இருந்திருந்தால் வென்றிருப்போம் என்று, நடந்து முடிந்ததைப் பற்றி பேசக் கூடாது. தேர்தலுக்கு முன்பு அண்ணாமலை பல கனவுகளை கண்டிருப்பார். அண்ணாமலையின் கனவு பலிக்கவில்லை என்பதால் இப்படி பேசுகிறார். பா.ஜனதா உடன் இனி கூட்டணி இல்லை. எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். 2026-ல் தனிப்பெரும்பான்மையுடன் அதி.மு.க. ஆட்சி அமைக்கும்.
அதிமுக.,வைப் பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதி கிடையாது. அவரை அடையாளம் காட்டியது அதிமுக., தான்.
அதிமுக மீண்டும் வலுப்பெறும். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது. தேசிய கட்சிகள் வெற்றி பெரும் வரை நம்மை பயன்படுத்திக் கொள்கின்றனர். பின்னர் கண்டுகொள்வதில்லை.
கோவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்பு போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணனைவிட அண்ணாமலை குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார். கனவு பலிக்காததால் ஓ.பன்னீர் செல்வம் ஆதங்கத்தில் பேசி வருகிறார். ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோர் தேவையில்லாத குழப்பதை ஏற்படுத்தி வருகின்றனர். தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள சரிவுகள் சரி செய்யப்படும்.
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை விட 2024-ம் ஆண்டு தேர்தலில் 1% வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளோம். இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை பாஜக தமிழகத்தில் வளர்ந்துவிட்டதை போல பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. 2014-ஆம் ஆண்டு தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. அந்த கூட்டணி 18.80% வாக்குகள் பெற்றார்கள்.
2024-ம் ஆண்டு இந்த தேர்தலில் அந்த கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 18.28%. ஆகவே, 2014 தேர்தலை காட்டிலும் 0.62% வாக்குகள் குறைவாக பெற்றுள்ளனர். எனவே, தமிழகத்தில் பா.ஜனதா அதிக வாக்கு சதவிகிதம் பெற்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாவது வருத்தமளிக்கிறது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தனியாக 33.52% வாக்குகள் பெற்றது. ஆனால், 2024 தேர்தலில் 26.93% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. 6.51% வாக்குகள் குறைந்துள்ளது.
2019 தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 53.29%. 2024 தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 46.97%. கடந்த தேர்தலை விட 6.32% வாக்குகள் குறைந்துள்ளது. இதனை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் அ.தி.மு.க வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.