< Back
மாநில செய்திகள்
அலைபாயுதே சினிமா பட பாணியில் திருமணம்... வீட்டுச்சிறையில் இளம்பெண்... அடுத்து நடந்த பரபரப்பு
மாநில செய்திகள்

அலைபாயுதே சினிமா பட பாணியில் திருமணம்... வீட்டுச்சிறையில் இளம்பெண்... அடுத்து நடந்த பரபரப்பு

தினத்தந்தி
|
4 July 2024 1:23 PM IST

மகளின் காதல் விவகாரம் தாயார் பிரேமகுமாரிக்கு தெரியவந்தது.

குமரி,

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள சாமியார்மடம் காட்டுவிளை புத்தன் வீடு பகுதியை சேர்ந்தவர் பிரேமகுமாரி (வயது 58). இவருடைய கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு அஸ்வதி (22) என்ற ஒரு மகள் உள்ளார். இவர் வீயன்னூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். அப்போது வீயன்னூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது.

அதைதொடர்ந்து இருவரும் நேரில் சந்தித்தும், செல்போன் மூலமும் காதலை வளர்த்து வந்தனர். இதற்கிடையே அஸ்வதி படிப்பு முடிந்து சாமியார்மடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். அங்கேயும் காதலன் ராஜேஷ் அடிக்கடி சென்று பேசுவது வழக்கம். இந்தநிலையில் மகளின் காதல் விவகாரம் தாயார் பிரேமகுமாரிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் மகளை கண்டித்தார். ஆனால் அஸ்வதி தனது காதலில் உறுதியாக இருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரேமகுமாரி உடனே மகளுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்தார். இதனால் நம்மை பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அஸ்வதி தாயார் வெளியே சென்ற நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 19-ந் தேதி கோவிலில் வைத்து தனது காதலன் ராஜேசை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் 'அலைபாயுதே' சினிமா பாணியில் அவரவர் வீடுகளுக்கு சென்று ஒன்றும் தெரியாததுபோல் வசித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் மகளின் திருமணம் தாயார் பிரேமகுமாரிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மகள் அஸ்வதியை கண்டித்து தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து அஸ்வதியை வேலைக்கு செல்ல விடாமல் வீட்டில் உள்ள அறையில் பூட்டி சிறை வைத்தார். நேரத்துக்கு நேரம் சாப்பாடு மட்டும் மகளின் அறைக்கு சென்றுள்ளது. மேலும் ராஜேஷை மறந்துவிடு என கூறி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் நீ என்னை கொன்றுபோட்டாலும் நான் எனது காதலனை மறக்க மாட்டேன் என்று அஸ்வதி உறுதியாக கூறினார். இதனால் பிரேமகுமாரியின் சித்ரவதை அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் தாயாரின் டார்ச்சரை பொறுக்க முடியாத அஸ்வதி வீட்டில் இருந்து தப்பித்து செல்ல திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் மாலை தாயாரின் கவனத்தை திசை திருப்பி வீட்டில் இருந்து வெளியேறினார்.

பின்னர் வீட்டின் சுவர் ஏறி குதித்து ஓட்டம் பிடித்தார். மேலும் வக்கீல் ஒருவருடன் வந்து திருவட்டார் போலீஸ் நிலையத்தில் காதல் கணவருடன் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அஸ்வதி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தாயார் பிரேமகுமாரியை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் நிலையத்துக்கு வந்த பிரேமகுமாரி காதல் கணவரோடு அஸ்வதி கைகோர்த்து நிற்பதை பார்த்து ஆத்திரமடைந்தார். சற்றும் எதிர்பாராத வகையில் போலீசார் முன்னிலையிலேயே மகள் அஸ்வதியை கீழே தள்ளி அடித்து உதைத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அஸ்வதியை மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிரேமகுமாரி கூறுகையில், அஸ்வதி எனக்கு ஒரே மகள். இதனால் மகளை செல்லமாக வளர்த்தேன். அதிக செலவு செய்து படிக்க வைத்தேன். ஆனால் நேற்று வந்த காதலனுக்காக பெற்ற தாயான என்னை உதறிவிட்டாளே என்று கூறி எனது மகளை என்னுடன் அனுப்பி வையுங்கள் என போலீசாரிடம் பிரேமகுமாரி புலம்பினார். ஆனால் அஸ்வதி தாயாருடன் செல்ல மறுத்ததோடு காதல் கணவருடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து அஸ்வதி மேஜர் என்பதால் காதல் கணவரான ராஜேசுடன் சேர்த்து வைத்து போலீசார் அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து வேறு வழியின்றி பிரேமகுமாரி சோகத்துடன் திரும்பி சென்றார்.

மேலும் செய்திகள்