கடலூரில் அதிமுக வார்டு செயலாளர் வெட்டி கொலை
|கடலூரில் அதிமுக வார்டு செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடலூர்,
கடலூர் நவநீதம் நகர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாதன் (வயது 43). இவர் அதிமுக வார்டு செயலாளராக இருந்தார். நேற்று இரவு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருப்பனம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கோவில் கலை நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார்.
பைக்கில் வந்து கொண்டிருந்த பத்மநாதன் மீது மர்ம கும்பல் காரை மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி பத்மநாதன் கீழே விழுந்துள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், பத்மநாதனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. புதுச்சேரி மாநில எல்லை பகுதியான திருப்பனாம்பாக்கம் என்ற இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடலூர் பகுதியைச் சேர்ந்த நபர்கள் முன்விரோதம் காரணமாக வெட்டியதாக பாகூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பத்மநாதன் கடந்த ஆண்டு பாஸ்கர் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பாஸ்கரின் கொலைக்கு பழி வாங்க இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.