அ.தி.மு.க. தொண்டர்களை அழைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை - கே.பி.முனுசாமி
|ஒற்றுமையால் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் என தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க.வால் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இப்படி இருக்க, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வால் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை. டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தனர்.
இந்த சூழலில், "அ.தி.மு.க. அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்" என்று அக்கட்சி தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ள நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என கூற ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்தவித உரிமையும் இல்லை. அ.தி.மு.க. பல சோதனைகளை சந்தித்தபோது அதற்கு முக்கிய கருவாக இருந்து மேலும் சோதனை கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க. தலைமை கழகத்தை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றவர் தான் ஓ.பன்னீர்செல்வம். சின்னத்தை முடக்குவதற்காக நீதிமன்றம் வரை சென்றவர் தான் ஓ.பன்னீர்செல்வம்.
தேர்தலில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து ராமநாதபுரம் தொகுதியில் நின்றவர் ஓ.பன்னீர்செல்வம். இவருக்கு அ.தி.மு.க.வையும், தொண்டர்களையும் அழைப்பதற்கு என்ன உரிமை உள்ளது?
எம்ஜிஆர் பாடலை பாடி ஒன்றுபட வேண்டும் என பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகுதி இல்லை. ஜெயலலிதாவை தவறாகப் பேசிய அண்ணாமலை உடன் அமர்ந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பேசுவதற்கு தகுதி இல்லை. அறிக்கை வெளியாகி இவ்வளவு நேரம் ஆகியும் எத்தனை தொண்டர்கள் அவர் பின்னால் சென்றுள்ளனர்?
2026 தேர்தலில் தி.மு.க.வை தோற்கடித்து, மீண்டும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைப்போம்"
இவ்வாறு அவர் கூறினார்.