சட்டசபை நடவடிக்கையில் பங்கேற்க அதிமுகவுக்கு இன்று ஒருநாள் தடை
|சட்டசபை நடவடிக்கையில் பங்கேற்க அதிமுக உறுப்பினர்களுக்கு இன்று ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து இரு நாட்களாக அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். மேலும், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், விஷ சாராய விவகாரம் தொடர்பாக அதிமுக நேற்று அவை நடவடிக்கைகளை முழுமையாக புறக்கணித்தது.
இதனிடையே, இன்றைய சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது, சட்டசபைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், சட்டசபையை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதால் அவை நடவடிக்கையில் பங்கேற்க அதிமுக உறுப்பினர்களுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.