'அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று ஒருநாள் அவை நடவடிக்கையில் பங்கேற்க முடியாது' - சபாநாயகர்
|அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று ஒருநாள் அவை நடவடிக்கையில் பங்கேற்க முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை,
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது கள்ளக்குறிச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கியது.
அப்போது கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதன்படி அ.தி.மு.க. எம்எல்.ஏ.க்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வெளியேற்றினர்.
இதையடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று ஒருநாள் அவை நடவடிக்கையில் பங்கேற்க முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மேலும் கவன ஈர்ப்பு தீர்மானத்தைப் பற்றி பேச எதிர்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கவில்லை என்று தெரிவித்த அப்பாவு, சட்டத்திற்கு புறம்பாக அவைக்குள் பதாகைகளை கொண்டு வந்து காட்டியுள்ளனர் என்றும், சட்டப்பேரவை மாண்பை குலைக்கும் வகையில் நடந்துகொண்டதால் அ.தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.