அதிமுக தலைவர்கள் ஒன்று சேர வேண்டும்: புகழேந்தி பேட்டி
|பல அதிமுக தலைவர்கள் பாஜகவுக்கு ஜால்ரா தட்டுகிறார்கள் என்று புகழேந்தி கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவின் நிலையை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல அதிமுக தலைவர்கள் பாஜகவுக்கு ஜால்ரா தட்டுகிறார்கள். இதையெல்லாம் அதிமுக தலைவர்கள் நினைத்து பார்த்து ஒன்று சேர வேண்டும். சசிகலா அவ்வப்போது வெளியில் வந்து, அதிமுகவைச் சேர்த்துவைக்கிறேன் என்று கூறிவிட்டு, வீட்டுக்குள் சென்று விடுகிறார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் சசிகலா அழைத்து பேச வேண்டும்.
அதிமுகவில் பல்வேறு பதவிகளை அனுபவிப்பவர் கே.பி.முனுசாமி. அவருக்கு எதுஅனுகூலமோ, அவரை எது வாழவைக்கிறதோ, எங்கு அவருக்கு வரவேற்பு இருக்கிறதோ அங்கு சேர்ந்து கொள்வார். வரும், 2026-ல் அதிமுக தோல்வியடைந்தால் எங்களையும் சேர்த்து தொண்டர்கள் துரத்தி துரத்தி அடிப்பர். பொறுப்பை உணர்ந்து, தொண்டர்களின் கருத்தை மதித்து, நடக்க வேண்டும்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு, பெரியார் ரெயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளோம். ஒருங்கிணைப்பு குழுவை ஆரம்பித்தோம். ஆனால் பல குழுக்களாக பிரிந்து, குற்றம் சாட்டினால் சரி வராது. இவ்வாறு அவர் பேசினார்.