தமிழக சட்டசபை மீண்டும் தொடங்கியது - அ.தி.மு.க. புறக்கணிப்பு
|கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து இரு நாட்களாக சட்டசபையில் அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.கவினர் இரு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன், இரு நாட்களாக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், சட்டசபையின் இன்றைய கூட்டத்தை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. விஷ சாராய விவகாரம் தொடர்பாக இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக புறக்கணித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த சூழலில், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். கேள்விநேரம் முடிந்ததும் உயர் கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு, பள்ளிக்கல்வித்துறை ஆகிய மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கிறது.