ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் தொடர்பான வழக்கு - மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
|ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் சேதமடைந்த தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ள அகழாய்வு அருங்காட்சியகத்தை புனரமைத்து, சீரமைக்க உத்தரவிடக் கோரி செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார், நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், தமிழக அரசு நிலம் வழங்கினால் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அருங்காட்சியகம் அமைக்க மக்களிடம் நிலம் கையகப்படுத்தப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழக அரசு நிலம் வழங்கலாமே என்று கூறியதோடு, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், நிரந்தரமான அருங்காட்சியகம் அமைப்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பதையும், தற்காலிக அருங்காட்சியகம் சேதமடைந்திருந்தால் அதை புனரமைப்பது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் மத்திய அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணை 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.