சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்
|நடிகர் ரஜினிகாந்துக்கு இதய ரத்த நாளத்தில் 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் கடந்த 30-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு வயிற்று பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து முதுநிலை டாக்டர்கள் குழுவினர், ரத்த நாளத்தில் உள்ள வீக்கத்தை சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' பொருத்தினர். ஸ்டென்ட் பொருத்தப்பட்ட பிறகு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்தின் உடல்நிலை முன்னேறியதை தொடர்ந்து, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து மருத்துவக்குழு அவரை கண்கானித்து வந்தது.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் பூரண குணடைந்து மனைவி லதா மற்றும் உறவினர்கள், டாக்டர்களுடன் வழக்கம்போல பேசினார். ரஜினிகாந்த் நலமாக இருப்பதாகவும், இன்றோ அல்லது நாளையோ வீடு திரும்புவார் என்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது வீடு திரும்பியுள்ளார். இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், டாக்டர்கள் ஆலோசனைகளின்படி சில வாரங்கள் அவர் தனது இல்லத்திலேயே ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது.