வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
|மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரியிடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியும் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று (01.07.2024) இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2-7-2024) கடிதம் எழுதியுள்ளார்.
முதல்-அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் சமீப வாரங்களில் இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளதோடு. IND-TN-10-MO- 1379 மற்றும் IND-TN-09-MO-2327 என்ற பதிவெண்களைக் கொண்ட இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும், இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளிலும் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் 1-7-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
1974 ம் ஆண்டிலிருந்தே அப்போதைய மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை நிலவுவதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது 27-6-2024 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைக் கோடிட்டுக் காட்டியுள்ள முதல்-அமைச்சர், தி.மு.க. தலைமையிலான மாநில அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது முழுவீச்சில் எதிர்த்தது என்பதையும், தனது எதிர்ப்பை தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு இது சம்பந்தமாக மாநில அரசுடன் முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், இந்திய மீனவர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், அவற்றைப் பறிக்கும் வகையிலும் கச்சத் தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்போதைய மத்திய அரசுதான் என்று தனது கடிதத்தில் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது தலைவரும், அப்போதைய தி.மு.க. தலைவருமான கலைஞர், சுப்ரீம்கோர்ட்டில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து, அதில் "மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பிற்கு முரணானதாக இருக்கும்போது. கச்சத்தீவின் இறையாண்மை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறியிருந்ததை முதல்-அமைச்சர் தனது கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார். பா.ஜ.க. தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்சினையை தேர்தல் நேர முழக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும் எனத் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில் மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.