பழங்குடியின இளைஞர்கள் தொழில் முகவர்களாக உயர்ந்து சாதனை - தமிழக அரசு
|திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் 6,384 புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக பழங்குடியின இளைஞர்கள் தொழில்முகவர்களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
"தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு புத்தொழில் நிறுவனங்களுக்கு அளித்துவரும் ஊக்கம் காரணமாகத் தமிழ்நாட்டில் 6,384 புத்தொழில் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் முதல்-அமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் உருவாகியுள்ளதோடு பலருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளன.
திராவிட மாடல் அரசால் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 20.9.2023-ல் முதல்-அமைச்சரால் வெளியிடப்பட்டது. 2021-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,032. இன்றைய நிலவரப்படி இது 4 மடங்கிற்கும் மேல் அதிகரித்து 8,416-ஐ எட்டியுள்ளது. மகளிர் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 966 ஆக இருந்தது தற்போது மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்து 3,163 ஆக உயர்ந்துள்ளதே இந்த அரசின் செயல்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலைக் கட்டமைத்துச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டது. இதில் தமிழ்நாடு முதல் நிலையை பிடித்திருப்பதிலிருந்தே இந்த அரசின் சாதனையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
முதல்-அமைச்சரின் திராவிட மாடல் அரசு அனைத்துச் சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தி பட்டியலின மற்றும் பழங்குடியினரால் நிறுவப்படும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்து ரூ. 80 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 38 நிறுவனங்களுக்கு ரூ. 55.20 கோடி பங்கு முதலீடுகள் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய புதுயுகத் தொழில் முனைவு வளர்ச்சியினை அடையும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் பட்டியலினத்தவர் பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டமானது 2022- 23 ஆம் நிதி ஆண்டில் கொண்டுவரப்பட்டது. கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில், நாட்டின் முன்மாதிரியாக விளங்கும் இத்திட்டத்தின் வாயிலாக 38 புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.55.2 கோடி பங்கு முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது சேலம், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோயமுத்தூர், ஈரோடு, நீலகிரி ஆகிய பல்வேறு மாவட்டத்தினை சேர்ந்தோர் இதன் வாயிலாக பயன்பெற்றுள்ளனர்.
ஸ்டார்ட்அப் திருவிழா:
புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்காக கோவையில் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்-அமைச்சர் நடத்திய தமிழ்நாடு புத்தொழில் திருவிழா 2023 மாபெரும் வெற்றி கண்டது. 21 ஆயிரம் பார்வையாளர்களோடு, 450 புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்ற கண்காட்சி அரங்கமும் இத்திருவிழாவில் இடம்பெற்றது. இந்த விழாவில் 3 கோடியே 64 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு வணிகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருவதன் மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் புத்தாக்கத் தொழில்கள் வளர்ச்சியில் பட்டியலின மலைவாழ் இன இளைஞர்களுக்கு ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தி, அவர்களை தொழில் முகவர்களாக உயர்த்துவதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். இதனை பட்டியலின பழங்குடி மக்கள் பாராட்டி வரவேற்கிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.