கோவையில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை... நண்பர்களும் உயிரிழந்த சோகம்
|மேலும் 4 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை,
தேனி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் 7 பேர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கொத்துக்கவுண்டன் புதூர் பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களில் அழகுராஜா என்பவர் சில தினங்களுக்கு முன்பு லாரி ஓட்டும்போது விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து அழகுராஜா தீக்குளித்துள்ளார். அப்போது பெட்ரோல் கேனை அழகுராஜா வீட்டில் தூக்கி எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்த மற்ற பொருட்கள் மீதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதில், வீட்டில் இருந்த அனைவரது மீதும் தீ பற்றிய நிலையில், அழகுராஜா உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேரின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.